நமது உலகில் தேவனுடைய ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தானாதிபதிகளாக நாம் ஊழியம் செய்கிறோம். [1]
[1]இந்த பாடத்தில் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் பின்வரும் நூல்களை உள்ளடக்கியது:
D. Mathew Allen, “The Kingdom in Matthew.” (1999). இது https://bible.org/article/kingdom-matthew March 22, 2021 என்னும் இணையதளத்தில் கிடைக்கிறது.
Darrell L. Bock, Luke: Baker Exegetical Commentary on the New Testament. (Grand Rapids: Baker Books, 1994-1996)
J. Dwight Pentecost, The Words and Works of Jesus Christ. (Grand Rapids: Zondervan, 1981)
Martyn Lloyd-Jones, Studies in the Sermon on the Mount. (Grand Rapids: Eerdmans, 1959)
முன்னுரை
புதிய ஏற்பாட்டில் 'தேவனுடைய ராஜ்யம்' என்பது ஒரு முக்கியக் கருப்பொருள். 'ராஜ்யம்' என்ற சொல் மத்தேயுவில் 56 முறையும், மாற்குவில் 21 முறையும், லூக்காவில் 39 முறையும், யோவான் சுவிசேஷத்தில் ஐந்து முறையும் வருகிறது.[1]
இயேசுவின் உவமைகளில் ஏறக்குறைய பாதி தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிக் கற்பிக்கின்றன. அவர் ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிக்கிறார். ராஜ்யத்தின் வல்லமையை நிரூபிப்பதற்காக அவர் சுகப்படுத்தினார் மற்றும் பிசாசுகளைத் துரத்தினார். பரமேறுதலுக்குப் பிறகு, ஆதித் திருச்சபை ராஜ்யத்தின் செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்தது (அப்போஸ்தலர் 8:12, அப்போஸ்தலர் 28:23).
இந்தப் பாடத்தில், இயேசுவின் ஊழியத்தில் தேவனுடைய ராஜ்யத்தையும், இன்றைய ஊழியத்தில் அந்த ராஜ்யத்தின் தாக்கத்தையும் குறித்துப் படிப்போம். இந்தப் பாடத்திட்டத்தின் இறுதியில், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து நைஜீரியாவில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு பிரசங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது உலகில் ராஜ்யத்தின் செய்தி ஊழியத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அந்தப் பிரசங்கம் விளக்குகிறது.
[1]மத்தேயு வழக்கமாக “பரலோக ராஜ்யம்” என்று குறிப்பிட்டார், அதே சமயம் லூக்கா “தேவனுடைய ராஜ்யம்” என்று குறிப்பிட்டார். மத்தேயுவின் முதல் வாசகர்கள் யூதர்களாக இருந்தனர்; யூதர்கள் தேவனுடைய பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அடிக்கடி “பரலோகம்” என்பதைத் தேவனைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தினர். மத்தேயு பெரும்பாலான இடங்களில் “தேவனுடைய ராஜ்யம்” என்பதற்குப் பதிலாக “பரலோக ராஜ்யம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இந்தப் பாடத்தில், மத்தேயுவை நேரடியாக மேற்கோள் காட்டும் போது தவிர மற்ற இடங்களில் நாம் “தேவனுடைய ராஜ்யம்” என்ற சொற்றொடரையே பயன்படுத்துவோம்.
தேவனுடைய ராஜ்யம்
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய படிப்பை அறிமுகப்படுத்த இரண்டு கேள்விகள் உள்ளன.[1]
1. தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன?
2. தேவனுடைய ராஜ்யம் எப்போது ஸ்தாபிக்கப்படுகிறது?
தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன?
► அப்போஸ்தலர் 1:1-8-ஐ வாசிக்கவும்.
உயிர்த்தெழுதலுக்குப் பிந்தைய 40 நாட்களில், இயேசு தம் சீஷர்களுடன் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர் பரமேறுவதற்கு சற்று முன்பு, சீஷர்கள், “ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று கேட்டார்கள். சீஷர்கள் எதிர்பார்த்தது:
1. ஓர் உடனடி ராஜ்யம்: “இக்காலத்திலா.” இயேசு உடனடியாக ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
2. ஓர் அரசியல் மற்றும் புவியியல் ரீதியான ராஜ்யம்: “திரும்பக் கொடுப்பீர்.” இயேசு ரோம சாம்ராஜ்யத்தை வீழ்த்தி, இஸ்ரவேலின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
3. ஒரு தேசத்திற்கான ராஜ்யம்: “இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத்.” பழைய ஏற்பாட்டின் தாவீது ராஜாக்களைப் போல இயேசு தேசத்தை ஆளுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.[2]
அதற்கு இயேசு, “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இயேசுவின் பதில் அவருடைய ராஜ்யம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது:
1. காலங்களுக்கு அப்பாற்பட்ட ராஜ்யம்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும்.” இயேசுவின் ராஜ்யம் மனிதனின் காலக்கணிப்பைச் சார்ந்ததல்ல, பிதாவின் காலக்கணிப்பைச் சார்ந்தது.
2. இயற்கைக்கு அப்பாற்பட்ட ராஜ்யம்: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து.” இயேசுவின் ராஜ்யம் அரசியல் அதிகாரத்தை அல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையை அடிப்படையாகக் கொண்டது.
3. உலகளாவிய ராஜ்யம்: “பூமியின் கடைசிப்பரியந்தமும்.” இயேசுவின் ராஜ்யம் எல்லா தேசங்களையும் எட்டியது. அது இஸ்ரவேலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
காலங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்று இயேசு சீஷர்களிடம் கூறினார். மாறாக, அவர்கள் இரண்டு விஷயங்களில் அக்கறை கொள்ள வேண்டும்: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வது மற்றும் பூமியின் எல்லைகள் வரை அவருக்குச் சாட்சிகளாக இருப்பது.
தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து இறையியலாளர்களிடையே மூன்று முதன்மைக் கண்ணோட்டங்கள் உள்ளன.
ராஜ்யம் இனி வரும்.
சில இறையியலாளர்கள், இயேசு ஆயிரம் வருட அரசாட்சியின்போது (millennium) பூமியில் ஆட்சி செய்யும்போது ஸ்தாபிக்கப்படும் ஒரு கடைசி கால ராஜ்யத்தை எதிர்பார்க்கிறார்கள். ராஜ்யத்தின் அரசியல் மற்றும் பிராந்திய அம்சங்களை வலியுறுத்தும் மத்தேயு 24-25 போன்ற வேதப்பகுதிகளை இந்த எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ராஜ்யம் வந்துவிட்டது.
மற்ற இறையியலாளர்கள், இயேசு பூமியில் இருந்தபோதே அவருடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்று போதிக்கிறார்கள். “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” மற்றும் “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத்தேயு 4:17 மற்றும் லூக்கா 11:20) போன்ற இயேசுவின் கூற்றுகளை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தக் கண்ணோட்டம் ராஜ்யத்தின் ஆவிக்குரிய தன்மையையும், விசுவாசிகளின் இருதயங்களில் தேவனின் ஆட்சியையும் மையமாகக் கொண்டுள்ளது.
ராஜ்யம் ஏற்கனவே வந்துவிட்டது, ஆனால் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.
பல இறையியலாளர்கள் ராஜ்யம் என்பது தற்போதைய மற்றும் எதிர்கால அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கியது என்று போதிக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, தேவனுடைய ராஜ்யம் இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் போது தொடங்கப்பட்டது; அது சபையின் கிரியைகள் மூலம் தொடர்ந்து பரவுகிறது; கிறிஸ்து ஆட்சி செய்யத் திரும்பும்போது அது முழுமையாக விரிவடையும்.[4] கிறிஸ்துவின் வருகையின்போது, அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, ராஜ்யத்தைப் பிதாவாகிய தேவனிடம் ஒப்புக்கொடுப்பார் (1 கொரிந்தியர் 15:24). இதுவே தேவனுடைய ராஜ்யத்தின் முழுமையான ஸ்தாபிதமாகும்.
► ராஜ்யத்தைப் பற்றிய இந்தக் கண்ணோட்டங்களில் எதை நீங்கள் கொள்கிறீர்கள்? ஒவ்வொரு கண்ணோட்டமும் ஊழியத்தில் ஏற்படுத்தும் நடைமுறைத் தாக்கம் என்ன?
இந்தப் பாடத்தில், ஏற்கனவே கிரியை செய்து கொண்டிருக்கும் ராஜ்யத்தின் அம்சங்களையும், இனி நிறைவேற வேண்டிய ராஜ்யத்தின் அம்சங்களையும் நாம் காண்போம். ஒரு ராஜ்யம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
ராஜா: பிறப்பில் சாஸ்திரிகள் முதல் சிலுவையில் எழுதப்பட்ட வாசகம் வரை, இயேசு ராஜாவாக வந்தார்.
அதிகாரம்: இயேசு தனது அற்புதங்கள் மூலமாகவும், கல்லறையின் மீதான வெற்றியின் மூலமாகவும் தனது அதிகாரத்தை நிரூபித்தார்.
சட்டம் (பிரமாணம்): இயேசு மலைப்பிரசங்கத்தில் ராஜ்யத்தின் சட்டத்தைச் சுருக்கமாகக் கூறினார்.
எல்லை (பிராந்தியம்): தனது ராஜ்யம் பூமியின் எல்லைகள் வரை நீண்டுள்ளது என்றும், ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒவ்வொரு மக்களிடமிருந்தும் மக்களை உள்ளடக்கியது என்றும் இயேசு போதித்தார்.
மக்கள்: ராஜாவால் மீட்கப்பட்டு, அவரால் ஆளப்படும் அனைவரும் இயேசுவின் ராஜ்யத்தின் குடிமக்கள் ஆவர்.
[1]தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய வீடியோ விரிவுரைக்கு, Scot McKnight வழங்கிய “What and Where is the Kingdom of God?” என்ற உரையை http://www.seedbed.com/where-is-the-kingdom-of-god/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். (மார்ச் 22, 2021 அன்று அணுகப்பட்டது.)
[2]John Stott, The Message of Apostles (Westmont, Illinois: InterVarsity Press, 1990), 41
[4]வேத வல்லுநர்கள் இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் போது ராஜ்யம் தொடங்கியதைக் குறிக்க “ராஜ்யத்தின் தொடக்கம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். “ராஜ்யத்தின் பரிபூரணம்” என்பது கிறிஸ்துவின் வருகையின் போது ராஜ்யத்தின் வாக்குத்தத்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதைக் குறிக்கிறது.
ராஜ்யத்தின் வாக்குத்தத்தம்
► மத்தேயு 3:1-12-ஐ வாசிக்கவும்.
புதிய ஏற்பாட்டில் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய முதல் குறிப்பு யோவான் ஸ்நானகனின் பிரசங்கத்தில் காணப்படுகிறது. பழைய உடன்படிக்கையின் கடைசித் தீர்க்கதரிசியாக, இஸ்ரவேலின் மதத் தலைவர்களின் மாய்மாலத்தை யோவான் கண்டித்தார். புதிய ஏற்பாட்டின் முதல் தூதுவனாக, அவர் ஒரு புதிய ராஜாவுக்கு வழியை ஆயத்தம் பண்ணினார். “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத்தேயு 3:2). “சமீபித்திருக்கிறது” என்ற சொற்றொடர் ராஜ்யம் மிக விரைவில் நெருங்கிக்கொண்டிருந்தது என்பதைக் குறிக்கிறது. அது இன்னும் வரவில்லை, ஆனால் மிக அருகில் இருந்தது. ஒரு புதிய ராஜ்யத்தைக் கொண்டுவரப்போகும் மேசியாவின் வருகைக்காக இஸ்ரவேலைத் தயார்படுத்த யோவான் பிரசங்கித்தார்.
யோவான் கைது செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே, இயேசு தனது பொது ஊழியத்தைத் தொடங்கினார். அவர் கலிலேயா எங்கும் சுற்றித்திரிந்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் (மத்தேயு 4:23). யோவான் ஸ்நானகனைப் போலவே, இயேசுவும், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத்தேயு 4:17) என்று பிரகடனப்படுத்தினார்.
► மத்தேயு 10:5-42-ஐ வாசிக்கவும்.
இஸ்ரவேல் வம்சத்தாராகிய காணாமல்போன ஆடுகளிடம் ராஜ்யத்தின் செய்தியைப் பிரசங்கிக்க இயேசு பன்னிரண்டு சீஷர்களை அனுப்பினார். யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவைப் போலவே, அவர்களும், “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத்தேயு 10:5-7) என்று பிரசங்கித்தார்கள்.
சீஷர்களின் ஊழியம் தங்கள் எஜமானரின் ஊழியத்தை மாதிரியாகக் கொண்டிருந்தது. இயேசுவைப் போலவே, அவர்களும் ராஜ்யத்தைப் பிரகடனப்படுத்தவும் மக்களின் சரீரத் தேவைகளைச் சந்திக்கவும் வேண்டியிருந்தது. தேவனுடைய ராஜ்யம் சாத்தானின் ஆளுகைக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்களாக, இயேசுவைப் போலவே அவர்களும் நோயாளிகளைக் குணப்படுத்தினர் மற்றும் பிசாசுகளைத் துரத்தினர். வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கவும், மரித்தோரை எழுப்பவும், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும் இயேசு தனது பிரதிநிதிகளை அனுப்பினார் (மத்தேயு 10:8).
ராஜ்யத்தின் துவக்கம்
► மத்தேயு 12:22-32-ஐ வாசிக்கவும்.
ஒரு ராஜ்யத்தைப் பற்றிய வாக்குத்தத்தம் புதிதல்ல. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் ஒரு எதிர்கால ராஜ்யத்தை வாக்களித்திருந்தனர். இருப்பினும், ராஜ்யம் என்பது வெறும் எதிர்கால நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு உடனடி நிஜம் என்று இயேசு பிரகடனப்படுத்தினார். தேவனுடைய ராஜ்யத்தின் துவக்கத்தை இயேசு அறிவித்தார். இயேசு எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் தேவனுடைய ராஜ்யம் இருந்தது.
பிசாசுகளின் மீதான தனது வல்லமையின் மூலம், சாத்தானின் ராஜ்யத்தை ஜெயித்த ராஜாவின் அதிகாரத்தை இயேசு காட்டினார். பிசாசு பிடித்த ஒரு மனிதனை அவர் குணமாக்கிய பிறகு, பிசாசுகளின் தலைவனாகிய பெல்சிபூலைக் கொண்டு இயேசு பிசாசுகளைத் துரத்துகிறார் என்று பரிசேயர்கள் கூறினர். தேவனுடைய வல்லமையின் மூலம் தான் சாத்தானின் ராஜ்யத்தை ஜெயித்துக்கொண்டிருப்பதாக இயேசு பதிலளித்தார்: “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத்தேயு 12:28). இயேசு சாத்தானின் ராஜ்யத்திற்குள் படையெடுத்திருந்தார்.
► மத்தேயு 11:1-24-ஐ வாசிக்கவும்.
இயேசுவின் அற்புதங்கள் அவரது ராஜ்யத்தின் தொடக்கத்திற்கான அடையாளங்களாக இருந்தன. யோவான் சுவிசேஷம் இயேசுவின் அற்புதங்களைக் குறிக்க 'அடையாளங்கள்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. அந்த அற்புதங்கள் இயேசுவின் தெய்வீகத்தன்மைக்கான அடையாளங்களாகவும், புதிய ராஜ்யத்திற்கான சான்றுகளாகவும் இருந்தன.
யோவான் ஸ்நானகன் “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று பிரகடனப்படுத்தினார். இஸ்ரவேலுக்கு விடுதலையைக் கொண்டுவரும் ஓர் அரசியல் ராஜ்யத்தை அவர் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு மாறாக, மரணத்தை எதிர்நோக்கியவாறு யோவான் தன்னைச் சிறையில் கண்டார்! அவர் தன் சீஷர்களை அனுப்பி, “வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா?” (மத்தேயு 11:3) என்று கேட்கச் சொன்னார். பூமிக்குரிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் ஓர் அரசியல் மேசியாவைப் பற்றிய யோவானின் எதிர்பார்ப்புகளோடு இயேசுவின் ஊழியம் பொருந்தவில்லை.
தனது மேசியாவுக்குரிய கிரியைகளைச் சுட்டிக்காட்டி இயேசு பதிலளித்தார்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார் (மத்தேயு 11:4-6).
மேசியாவைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட அடையாளங்கள் நிறைவேறுவதை இயேசு யோவானுக்கு நினைப்பூட்டினார். யோவானின் வலிமையையும் தைரியத்தையும் இயேசு பாராட்டினாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவன் யோவானை விடப் பெரியவன் என்று அறிவித்தார். ஏன்? ராஜ்யத்தின் அனைத்துச் சிலாக்கியங்களுடனும் ஒரு புதிய உடன்படிக்கையை ஸ்தாபிக்க இயேசு வந்திருந்தார். பழைய ஏற்பாட்டின் மிகப் பெரிய பரிசுத்தவான் ஒருபோதும் கண்டிராத சிலாக்கியங்களைப் புதிய ஏற்பாட்டின் மிகச் சிறிய விசுவாசியும் பெற்றிருந்தான். பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலைப் புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் கண்டார்கள். வாக்களிக்கப்பட்ட ராஜ்யம் தொடங்கப்பட்டுவிட்டது.
ராஜ்யத்தின் வாழ்க்கை: மலைப்பிரசங்கம்
சுவிசேஷங்களில் பதிவுசெய்யப்பட்ட ஒரே நீண்ட பிரசங்கம் இயேசுவின் மலைப்பிரசங்கம் ஆகும். தேவனுடைய ராஜ்யம் என்பது இந்தப் பிரசங்கத்தை ஒன்றிணைக்கும் ஒரு கருப்பொருளாகும். இது பல வழிகளில் காணப்படுகிறது:
பரலோகராஜ்யம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு உரியது என்று முதலாவது பாக்கியவசனம் போதிக்கிறது (மத்தேயு 5:3). பரலோகராஜ்யம் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்கு உரியது என்று கடைசிப் பாக்கியவசனம் போதிக்கிறது (மத்தேயு 5:10). பாக்கியவசனங்களின் முதன்மையான கருப்பொருள் பரலோகராஜ்யம் என்பதைக் காட்டும் விதமாக, இவை இரண்டும் மற்ற பாக்கியவசனங்களைச் சுற்றி ஓர் உறை போல அமைந்துள்ளன.
நியாயப்பிரமாணத்திற்குப் புதிய விளக்கம் அளிக்கும் அதிகாரத்தைத் தனக்கு இருப்பதாக இயேசு கோருகிறார் (மத்தேயு 5:21-48). இது தனது ராஜ்யத்தின் சட்டங்களுக்கு விளக்கமளிக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட ஒரு ராஜாவின் செயல்.
இயேசு சீஷர்களுக்கு இப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:9-13). பூமியில் தேவனுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காக ஜெபிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவனுடைய மக்கள் மலைப்பிரசங்கத்தின்படி வாழும்போது, ராஜ்யம் விரிவடைகிறது மற்றும் தேவனுடைய அதிகாரம் ராஜ்யத்தின் புதிய குடிமக்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
பிரசங்கத்தின் முடிவில், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கப் பலத்த செய்கைகள் (அற்புதங்கள்) மட்டும் போதாது என்று இயேசு போதித்தார். பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் மட்டுமே ராஜ்யத்தில் பிரவேசிப்பான் (மத்தேயு 7:21).
மலைப்பிரசங்கத்தை வாசிப்பதற்கான கொள்கைகள்
மலைப்பிரசங்கத்தை நாம் வாசிக்கும்போது மூன்று கொள்கைகளை நினைவில் கொள்ள வேண்டும்.
“இப்படி வாழ்ந்தால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக மாறுவீர்கள்” என்று நாம் நினைக்கக்கூடாது. மாறாக, ராஜ்யத்தின் குடிமகனாக வாழ்வதற்கான ஒரு வழிகாட்டியாக இந்தப் பிரசங்கத்தை நாம் வாசிக்க வேண்டும்: “நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதினால் இப்படி வாழுங்கள்.” நாம் கிருபையினால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம்; பின்னர், தேவனுடைய ராஜ்யத்தின் அங்கத்தினர்களாக, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
(2) மலைப்பிரசங்கம் சீஷர்களுக்கானது, அவிசுவாசிகளுக்கானது அல்ல.
இது ஒரு மதச்சார்பற்ற நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டம் அல்ல. விசுவாசியாத உங்கள் அயலார் இந்தக் கொள்கைகளின்படி வாழ மறுக்கும்போது ஆச்சரியப்பட வேண்டாம்! இது தேவனுடைய ராஜ்யத்தில் உள்ள வாழ்க்கையின் விளக்கமே தவிர, மனித ராஜ்யங்களில் உள்ள வாழ்க்கைக்கான விளக்கம் அல்ல.
(3) மலைப்பிரசங்கம் ஒவ்வொரு விசுவாசிக்குமானது.
இந்தக் கொள்கைகள் சாதாரண விசுவாசிகளுக்குப் பொருந்தாது என்று வாதிடுவதன் மூலம் பலர் மலைப்பிரசங்கத்தின் கோரிக்கைகளைத் தவிர்க்க முயன்றனர். சிலர், “இந்தச் சட்டம் எதிர்கால ஆயிரம் வருட அரசாட்சிக்கான (millennial kingdom) சட்டம்” என்று கூறினர். சிலர், “இது ஒரு சில பரிசுத்தவான்களுக்கானது. பெரும்பாலான கிறிஸ்தவர்களால் இந்தக் கட்டளைகளைப் பின்பற்ற முடியாது” என்று கூறினர். இன்னும் சிலர், “தேவனுடைய கட்டளைகளை நம்மால் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது என்பதை இந்தப் பிரசங்கம் காட்டுகிறது. தேவனுடைய கோரிக்கைகளை நம்மால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை நாம் காணும்போது, நாம் கிருபையை மட்டுமே சார்ந்திருப்போம்” என்று கூறினர்.
இருப்பினும், ஆதித் திருச்சபை மலைப்பிரசங்கத்தை ஒவ்வொரு விசுவாசிக்குமான ஒரு வழிகாட்டியாக வாசித்தது. யாக்கோபு மற்றும் 1 பேதுரு நிருபங்கள் இந்தப் பிரசங்கத்தின் பல கட்டளைகளைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றன. தேவனுடைய பரிசுத்தத்தின் தரத்தைக் குறைக்க இயேசு மறுத்துவிட்டார். பரிசேயர்களை விடக் குறைந்த தரத்திற்குப் பதிலாக, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை உயர்ந்த தரத்தில் வைத்திருந்தார்: “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:20).
தேவனுடைய ராஜ்யத்தில் வாழ்க்கை
► மத்தேயு 5-7-ஐ வாசிக்கவும்.
இயேசு தனது பூமிக்குரிய ஊழியத்தின் போது ராஜ்யத்தைத் தொடங்கினார் என்றால், நாம் இப்போது தேவனுடைய ராஜ்யத்தில் வாழ்கிறோம். மலைப்பிரசங்கம் பரலோகராஜ்யக் குடிமகனின் பண்புநலனை விவரிக்கிறது. பிரசங்கத்தின் கருப்பொருள்களின் சுருக்கமான கண்ணோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
(1) தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்புகள் இவ்வுலகத்தின் மதிப்புகளுக்கு முரணானவை.
ஏழ்மையாக இருப்பது, துயரப்படுவது, நம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அல்லது துன்பப்படுத்தப்படுவது பாக்கியம் என்று எந்த பூமிக்குரிய ஆட்சியாளரும் சொல்வதில்லை. இயேசுவின் காலத்தில் இருந்த ரோமப் பேரரசு மற்றும் இன்றைய நம் உலகின் மதிப்புகளுக்கு நேர் எதிரானதை பாக்கியவசனங்கள் கூறுகின்றன. தேவனுடைய ராஜ்யம் மனிதனுடைய ராஜ்யத்திலிருந்து வேறுபட்டது.
(2) தேவனுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
[1]இயேசுவின் காலத்தில் வாழ்ந்த எசெனியர்கள் (Essenes), நீதிமான்கள் சமூகத்திலிருந்து விலகித் தனிமையில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இயேசு சொன்னார், “இல்லை! உங்கள் உலகத்தைப் பாதுகாக்கும் மற்றும் சுவையூட்டும் உப்பாக நீங்கள் இருக்க வேண்டும். பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும் வெளிச்சமாக நீங்கள் இருக்க வேண்டும்.” தேவனுடைய ராஜ்யம் முதன்மையாக ஆவிக்குரியதாக இருந்தாலும், ராஜ்யத்தின் குடிமக்களின் பிரசன்னத்தால் நம் உலகம் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாகப் பயனடைய வேண்டும்.
மதச்சார்பற்ற சமூகத்தில் உப்பாகவும் வெளிச்சமாகவும் இருந்த கிறிஸ்தவர்களின் பல உதாரணங்களை நாம் பட்டியலிடலாம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அடிமை வர்த்தகத்தை ஒழிக்க வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் பாராளுமன்றத்தை வழிநடத்தினார்; மெத்தடிஸ்ட் எழுப்புதல் ஆங்கிலேய சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் சமூகச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது; வில்லியம் கேரி இந்தியாவில் சிசுக்கொலை மற்றும் சதி (உடன்கட்டை ஏறுதல்) ஆகியவற்றை எதிர்த்துப் போராடினார்; கிறிஸ்தவர்கள் கல்வியறிவைப் பரப்பினார்கள், மருத்துவமனைகள் மற்றும் அனாதை இல்லங்களை நிறுவினார்கள், மேலும் பல நாடுகளில் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் சேவை செய்தார்கள்.
இயேசு நியாயப்பிரமாணத்தை நீக்க வரவில்லை, அதை நிறைவேற்ற வந்தார். “அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17). ஒன்றை நிறைவேற்றுவது என்பது அதை முழுமைக்குக் கொண்டுவருவது அல்லது அதைச் சாதிப்பதாகும். இயேசு நியாயப்பிரமாணத்தை நீக்க வரவில்லை, ஆனால் நியாயப்பிரமாணத்திற்குப் பின்னால் உள்ள ஆவியை (நோக்கத்தை) வெளிப்படுத்த வந்தார். ஆறு உதாரணங்களின் வரிசையில், ராஜ்யத்தின் குடிமக்களின் நீதி வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் நீதியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று இயேசு காட்டுகிறார்.
நியாயப்பிரமாணம்
ராஜ்யத்தின் குடிமக்கள்
நியாயப்பிரமாணம் கொலை செய்தலைத் தடை செய்கிறது.
ராஜ்யத்தின் குடிமக்கள் கோபம் என்கிற ஆணிவேரான காரணத்தைக் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்.
நியாயப்பிரமாணம் விபச்சாரத்தைத் தடை செய்கிறது.
ராஜ்யத்தின் குடிமக்கள் ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதில்லை.
நியாயப்பிரமாணம் ஒரு “தள்ளுதற்சீட்டை” அவசியமாக்குகிறது.
ராஜ்யத்தின் குடிமக்கள் திருமண உறவிலிருந்து வெளியேறுவதற்கான சாக்குப்போக்குகளைத் தேடாமல், அதில் நிலைத்திருப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.
நியாயப்பிரமாணம் பொய்யாணைகளைத் தடை செய்கிறது.
ஒரு ராஜ்யத்தின் குடிமகன் சொல்லும் “ஆம்” அல்லது “இல்லை” என்பதே போதுமானது.
ராஜ்யத்தின் குடிமக்கள் பழிவாங்கும் எண்ணத்தால் அல்ல, அன்பினால் செயல்படுகிறார்கள்.
நியாயப்பிரமாணம் உங்கள் பிறனிடத்தில் அன்புகூரக் கட்டளையிடுகிறது.
ராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் சத்துருக்களையும் நேசிக்கிறார்கள்.[2] அவர்கள் தங்கள் பரலோகப் பிதாவின் அன்பையும் இரக்கத்தையும் பிரதிபலிக்கிறார்கள் (லூக்கா 6:36).
(4) ராஜ்யத்தின் குடிமக்கள் மற்றவர்களைப் பிரியப்படுத்துவதை விடத் தேவனைப் பிரியப்படுத்துவதிலேயே அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
பரிசேயர்கள் தங்கள் தாராள குணத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினர்; ராஜ்யத்தின் குடிமக்கள் அந்தரங்கமாகக் கொடுக்கிறார்கள். மாய்மாலக்காரர்கள் தங்கள் ஈர்க்கக்கூடிய ஜெபங்களை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று விரும்பினர்; ராஜ்யத்தின் குடிமக்கள் எளிமையாகவும் ஊக்கமாகவும் ஜெபிக்கிறார்கள். பரிசேயர்கள் தங்கள் நீண்ட உபவாசங்களுக்காக மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று விரும்பினர்; ராஜ்யத்தின் குடிமக்கள் பிதாவின் பலனுக்காக மட்டுமே உபவாசிக்கிறார்கள்.
(5) ராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் செல்வத்தை நம்புவதில்லை அல்லது தங்கள் தேவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
மாறாக, அவர்கள் தங்கள் பரலோகப் பிதாவின் ஏற்பாட்டை (provision) நம்புகிறார்கள்.
இருப்பினும், கள்ளப் போதகர்களின் கெட்ட கனியைப் பகுத்தறிவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
(7) ராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் ஜெபங்களில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
பரலோகத்திலிருக்கிற தங்கள் பிதா தம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பார் என்பதை அறிந்திருப்பதால், ராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் ஜெபங்களில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்! (மத்தேயு 7:11).
(8) இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்பதை ராஜ்யத்தின் குடிமக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
[3]அங்கே ஒரு விரிவான வாசல் மற்றும் ஒரு இடுக்கமான வாசல் உள்ளது. ஒரு நல்ல மரம் மற்றும் ஒரு கெட்ட மரம் உள்ளது. ஒரு புத்தியுள்ள சிற்பாச்சாரி மற்றும் ஒரு புத்தியில்லாத சிற்பாச்சாரி இருக்கிறான். ராஜ்யத்தின் குடிமக்கள் பகுத்தறிவு உள்ளவர்கள்.
ராஜ்யத்தின் கொள்கைகளின்படி வாழ்தல்
மலைப்பிரசங்கத்தின் கொள்கைகளின்படி நாம் எப்படி வாழ முடியும்? இதற்கான திறவுகோல் மத்தேயு 5:48-ல் உள்ளது. ராஜ்யத்தின் குடிமக்கள் நம் பரலோகப் பிதாவைப் போலவே இருக்கும்படி அழைக்கப்பட்டுள்ளார்கள். இயேசுவின் போதனை அவ்வளவு எளிமையானது, அதே சமயம் அவ்வளவு கடினமானது. இயேசுவின் போதனைப்படி வாழ தேவனுடைய கிருபை மட்டுமே நமக்கு வல்லமையளிக்கிறது. நம் சொந்த பலத்தால், மலைப்பிரசங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நம்மால் ஒருபோதும் வாழ முடியாது. ஆவியானவர் மட்டுமே ராஜ்யத்தின் வாழ்க்கையைச் சாத்தியமாக்குகிறார்.
மலைப்பிரசங்கத்தைப் பிரசங்கிக்கும்போது இந்தக் கொள்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் மலைப்பிரசங்கத்தை வெறும் சட்டமாக (நியாயப்பிரமாணமாக) மட்டுமே பிரசங்கித்தால், அது மக்களை விரக்திக்கும் சோர்வுக்கும் உள்ளாக்கும். தேவனுடைய கிருபையால் வழங்கப்பட்டு, குமாரனின் தியாகத்தால் சம்பாதிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் வல்லமையூட்டப்படுகிற ராஜ்யத்தின் வாழ்க்கைக்கான ஒரு மாதிரியாக நாம் மலைப்பிரசங்கத்தைப் பிரசங்கிக்கும்போது மட்டுமே, அது உண்மையாகவே சுவிசேஷமாக, அதாவது “நற்செய்தியாக” மாறுகிறது.
► மலைப்பிரசங்கத்தை வாசித்து, இச்சுருக்கத்தை மறுஆய்வு செய்த பிறகு, கலந்துரையாடுங்கள்:
மலைப்பிரசங்கத்தின் எந்தப் போதனைகள் உங்கள் சமூகத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மிகவும் கடினமானவை?
ஒரு கிறிஸ்தவத் தலைவராக உங்களுக்கு மலைப்பிரசங்கத்தின் எந்தப் போதனைகள் மிகவும் கடினமானவை?
“மலைப்பிரசங்கம் என்பது நிபந்தனைகளுடன் நேசிப்பதற்கும், சுயலாபத்துக்காக நேசிப்பதற்கும், அல்லது உண்மையான நீதிக்கான அழைப்பைப் புறக்கணிப்பதற்கும் எதிரான ஒரு எச்சரிக்கையாகும். உண்மையில், இப்பிரசங்கம் தேவனைப் போன்ற மன்னிப்பு, கொடுத்தல், நன்றியுணர்வு மற்றும் மனதுருக்கமுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கான ஓர் அழைப்பாகும்.”
- டாரெல் பாக்
ராஜ்யத்தின் இரகசியம்: ராஜ்யத்தின் உவமைகள்
கோட்பாட்டு அறிக்கைகளை விட, கதைகளை நாம் நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதை யூதப் போதகர்கள் அறிந்திருந்தார்கள். இதன் காரணமாக, உவமைகள் யூத ரபிமார்களிடம் பிரபலமான ஒரு கற்பித்தல் வடிவமாக இருந்தன. தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய ஆழமான சத்தியங்களைத் தொடர்புகொள்ள இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார்.
அவரது ஊழியத்தின் ஆரம்ப காலத்தில், உவமைகளைப் பயன்படுத்தியதன் மூலம், எதிரிகளுடன் நேரடி மோதலைத் தவிர்த்து, சீஷர்களுக்குக் கற்பிக்க இயேசுவால் முடிந்தது. பின்னர், எருசலேமில் உள்ள மதத் தலைவர்களை இயேசு நேரடியாக எதிர்த்து நின்றார்; ஆனால் இந்த ஆரம்ப ஆண்டுகளில், அவரது கவனம் சீஷர்களுக்குக் கற்பிப்பதாகவே இருந்தது.
அநேகர் உவமைகளைக் கேட்டார்கள், ஆனால் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கேட்டும் உணராதிருக்கிறார்கள்; கண்டும் அறியாதிருக்கிறார்கள் (மத்தேயு 13:14). ஏன்? ஏனென்றால் அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தியிருந்தார்கள். ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தபடி இது நடந்தது:
இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே (மத்தேயு 13:15, ஏசாயா 6:9-லிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது).
உவமைகள் மூலம், கேட்கும் காதுள்ளவர்களுக்கு இயேசுவால் போதிக்க முடிந்தது.
மத்தேயு 13, ராஜ்யத்தின் இரகசியங்களைப் பற்றிய உவமைகளின் வரிசையை முன்வைக்கிறது (மத்தேயு 13:11). இந்த உவமைகள் விசுவாசியாத தலைவர்களிடமிருந்து இயேசுவின் போதனையின் பெரும்பகுதியை மறைக்கும் அதே வேளையில், இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்குத் தேவனுடைய ராஜ்யத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
► தொடர்வதற்கு முன், இங்கே நிறுத்தி மத்தேயு 13:1-52 மற்றும் லூக்கா 19:11-27 ஆகியவற்றை வாசியுங்கள். நீங்கள் ஒவ்வொரு உவமையையும் படிக்கும்போது, அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் அதன் முதன்மையான கருப்பொருளை ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் சுருக்கமாக எழுதுங்கள். ஒவ்வொரு உவமைக்கும், இன்றைய ஊழியத்திற்கான ஒரு பயன்பாட்டைக் கண்டறியவும். முதல் உவமை உங்களுக்கு ஒரு உதாரணமாக நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
விதையைக் கேட்பவர் அதற்கு அளிக்கும் பதில் நடவடிக்கையே அதன் பலனைத் தீர்மானிக்கிறது.
நான் பிரசங்கிக்கும்போதும் போதிக்கும்போதும், அதன் விளைவுகளுக்காகத் தேவனையே நம்பியிருக்க வேண்டும். அறுவடைக்கு நான் பொறுப்பல்ல; உண்மையோடு விதையை விதைப்பதே என் பொறுப்பு.
களைகள்
கடுகு விதை
புளித்த மாவு
நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷம்
விலையுயர்ந்த முத்து
வலை
வீட்டெஜமானாகிய மனுஷன்
பத்துராத்தல் திரவியம்
விதைக்கிறவனைப் பற்றிய உவமை (மத்தேயு 13:3-9, 18-23; லூக்கா 8:5-18)
ராஜ்யத்தைப் பற்றிய இந்த உவமைகளின் வரிசையில் முதல் உவமை, விதைக்கு நாம் அளிக்கும் பதில் நடவடிக்கையே அதன் பலனைத் தீர்மானிக்கிறது என்று போதிக்கிறது. பரலோகராஜ்யத்தில், சிலர் விசுவாசித்து கனி கொடுப்பார்கள், மற்றவர்களோ விசுவாசிக்க மறுப்பார்கள் அல்லது ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டு பின்னர் பின்வாங்கிப் போவார்கள்.
இந்த உவமையை ‘நிலங்களைப் பற்றிய உவமை’ என்று அழைக்கலாம், ஏனெனில் இது வெவ்வேறு விவசாயிகளைப் பற்றியது அல்ல, வெவ்வேறு நிலங்களைப் பற்றிய கதை. ஒவ்வொரு உதாரணத்திலும், விதை ஒன்றாகவே இருந்தது, விவசாயியும் ஒருவரே; வித்தியாசம் நிலத்தில் மட்டுமே இருந்தது. நாம் ராஜ்யத்தின் செய்தியைப் பிரசங்கிக்கும்போது, சிலர் மற்றவர்களை விடக் குறைவாக ஏற்றுக்கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடையக் கூடாது. நாம் சோர்வடையக் கூடாது. சிலர் கனி கொடுக்கும் நிலமாக இருப்பார்கள் என்றும், மற்றவர்கள் வார்த்தைக்கு எதிராகத் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்வார்கள் என்றும் இயேசு போதித்தார்.
விதைக்கிறவனைப் பற்றிய உவமைக்கு லூக்கா அளிக்கும் முடிவுரை, இது சத்தியத்திற்குக் செவிகொடுப்பதைப் பற்றிய ஒரு உவமை என்பதைக் காட்டுகிறது. “ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்” (லூக்கா 8:18). ஒரு நபர் சத்தியத்திற்குச் சாதகமாகப் பதிலளிக்கும்போது, அவர்கள் அதிக சத்தியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். பிரசங்கத்தில் மற்ற உவமைகளைக் கூறுவதற்கு முன்பு, கனி கொடுக்கும் நிலத்தைப் போல எப்படிக் கேட்பது என்று இயேசு தன் பார்வையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
களைகளைப் பற்றிய உவமை (மத்தேயு 13:24-30, 36-43)
தேவனுடைய ராஜ்யம் துன்மார்க்கர் மீது உடனடி நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும் என்று யூத மக்கள் எதிர்பார்த்தார்கள். உலகத்தில் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒன்றாக வாழும் ஒரு காலக்கட்டத்திற்காக இயேசு தம் சீஷர்களைத் தயார்படுத்தினார். இந்தக் கதையில், வயல் என்பது உலகம் (மத்தேயு 13:38). உலகத்தின் முடிவில்தான் தேவதூதர்கள் களைகளைச் சேர்த்து அக்கினியில் சுட்டெரிப்பார்கள் (மத்தேயு 13:40). தேவனுடைய ராஜ்யம் மனிதனின் காலக்கணிப்பின்படி அல்ல, தேவனுடைய காலக்கணிப்பின்படியே வளர்ச்சியடையும்.
கடுகுவிதையைப் பற்றிய உவமை (மத்தேயு 13:31-32)
இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தைப் பார்த்த எவரும், உலகம் முழுவதும் சபை பரவும் என்று கணித்திருக்க முடியாது. சீஷர்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள் மற்றும் பயந்த சுபாவமுள்ளவர்கள். அவர்களுக்குக் கவர்ச்சியோ (charisma), சமூக அந்தஸ்தோ அல்லது அரசியல் அதிகாரமோ இல்லை. அவர்கள் அந்தச் சிறிய கடுகுவிதையைப் போல இருந்தார்கள். ஆனால் ஒரு சிறிய கடுகுவிதை எப்படி ஒரு பெரிய மரமாக அல்லது செடியாக வளர்ந்ததோ, அப்படியே தேவனுடைய ராஜ்யம் உலகம் முழுவதும் பரவும்.
தேவனுடைய ராஜ்யத்தைக் கடுகுவிதைக்கு இயேசு ஒப்பிடுவதைக் கேட்டு அவருடைய பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். தேவனுடைய ராஜ்யம் வல்லமையோடும் மகிமையோடும் வரும் என்று யூத ரபிமார்கள் எதிர்பார்த்தார்கள். பாவிகள் மீதான நியாயத்தீர்ப்பு வெளிப்படும் என்று எதிர்பார்த்தார்கள்; ரோமுக்கு எதிராக இராணுவப் புரட்சியை எதிர்பார்த்தார்கள்; புதிய யூத ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது சமூகப் புரட்சியை எதிர்பார்த்தார்கள். அதற்கு மாறாக, ராஜ்யத்தின் மிகச் சாதாரணமான (கவர்ச்சியற்ற) தொடக்கத்திற்காக இயேசு தம் சீஷர்களைத் தயார்படுத்தினார்.
நாம் புதிய ஏற்பாட்டை வாசிக்கும்போது, முதல் நூற்றாண்டில் யூதேயாவின் அற்பமான நிலையை மறந்துவிடக்கூடும். யூதேயா புதிய ஏற்பாட்டின் மையமாக இருக்கிறது, ஆனால் அது முதல் நூற்றாண்டு உலகின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. உங்கள் நாட்டின் தலைநகரைப் பற்றிச் சிந்தியுங்கள். முதல் நூற்றாண்டில் யூதேயாவின் பங்கு அதுவல்ல; அந்தப் பங்கு ரோமுக்கு உரியது. சிறந்த பல்கலைக்கழகமும் கல்வி முறையும் கொண்ட ஒரு நகரத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். முதல் நூற்றாண்டில் யூதேயாவின் பங்கு அதுவல்ல; அந்தப் பங்கு அத்தேனே (Athens) அல்லது அலெக்ஸாந்திரியாவுக்கு உரியது.
உலகின் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், யூதேயா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை; பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை; சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை. உங்கள் நாட்டில் மிகவும் முக்கியத்துவமற்ற பிராந்தியங்களில் ஒன்றை நினைத்துப் பாருங்கள்; ரோமப் பேரரசில் யூதேயாவின் இடம் அதுவாகவே இருந்தது.
ரோமப் பேரரசின் ஒரு மூலையிலிருந்து வந்த ஒரு சிறிய குழுவிலிருந்து, எல்லா தேசங்களையும் எட்டும் ஒரு மரமாகத் தேவனுடைய ராஜ்யம் வளர்ந்ததை கடுகுவிதை உவமை காட்டியது.[1] தேவனுடைய ராஜ்யம் யூதர்களுக்கு மட்டுமே உரியது என்று யூத ரபிமார்கள் போதித்தார்கள்; தேவனுடைய ராஜ்யம் பூமியின் எல்லைகள் வரை எட்டும் என்று இயேசு போதித்தார்.
புளித்தமாவைப் பற்றிய உவமை (மத்தேயு 13:33)
புளித்தமாவைப் பற்றிய உவமையும் ராஜ்யத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை விளக்குகிறது. ராஜ்யம் பரவுவதற்கான அடையாளமாக இயேசு புளித்தமாவைப் பயன்படுத்தினார். மூன்று படி மாவு 100 பேருக்கு அப்பத்தை உண்டாக்கும். அதன் ஆரம்பம் அற்பமாக இருந்தாலும், ராஜ்யம் ஒரு வல்லமைமிக்க சக்தியாக வளரும்.
புளித்தமாவைப் பற்றிய உவமை ராஜ்யத்தின் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. புளித்தமாவு நாடகத்தனமானது அல்ல; அது டைனமைட் போல வெடிக்காது; அது அப்பம் முழுவதும் அமைதியாகத் தனது வேலையைச் செய்கிறது. தேவனுடைய ராஜ்யம் உலகளாவிய அடையாளங்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று யூத ரபிமார்கள் போதித்தார்கள்; ஆனால் ராஜ்யம் உலகம் முழுவதும் பரவும் வரை மெதுவாக, ஆனால் நிலையாக வளரும் என்று இயேசு காட்டினார்.
நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷம் மற்றும் விலையுயர்ந்த முத்து பற்றிய உவமைகள் (மத்தேயு 13:44-46)
இந்த இரண்டு உவமைகளும் ராஜ்யத்தின் மகிழ்ச்சியைப் பற்றியவை. இரண்டிலும், ஒரு மனிதன் மிகப்பெரிய மதிப்புள்ள ஒன்றைக் கண்டறிந்து, தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அதை வாங்கினான். இந்த உவமைகளின் மையம் அந்த மனிதனின் தியாகம் அல்ல, அவ்வளவு மதிப்புள்ள ஒன்றைக் கண்டுபிடித்த அவனது மகிழ்ச்சியே. அவன் தனது மகிழ்ச்சியினாலே போய் எல்லாவற்றையும் விற்கிறான்! உண்மையான சீஷர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இந்த உவமைகள் ராஜ்யத்தின் மேலான மதிப்பை எடுத்துக் காட்டுகின்றன. தேவனுடைய ராஜ்யம் வாழ்க்கையின் மீதான நம் கண்ணோட்டம் முழுவதையும் பாதிக்கிறது. மற்றோரிடத்தில் இயேசு, “உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மாற்கு 9:47) என்று கூறினார். தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எத்தகைய பூமிக்குரிய தியாகத்திற்கும் ஈடானது.
வலையைப் பற்றிய உவமை (மத்தேயு 13:47-50)
கலிலேயாக் கடலில் உள்ள மீன்பிடிப் படகுகள் ஒரு பெரிய வலையை இழுத்து, உண்ணக்கூடிய மற்றும் உண்ணக்கூடாத மீன்கள் என இரண்டையும் பிடிக்கும். கரைக்குத் திரும்பியதும், மீனவர்கள் நல்ல மீன்களைக் கெட்டவைகளிலிருந்து பிரிப்பார்கள்.
களைகளைப் பற்றிய உவமையைப் போலவே, இந்த உவமையும் உலகத்தின் முடிவில் நியாயத்தீர்ப்பு வரும் என்பதைச் சீஷர்களுக்கு நினைப்பூட்டியது. உடனடி நியாயத்தீர்ப்பை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, தேவன் தனது காலக்கணிப்பில் பொல்லாதவர்களையும் நீதிமானங்களையும் நியாயந்தீர்ப்பார் என்பதை அறிந்து அவர்கள் ராஜ்யத்தைப் பிரசங்கிக்க வேண்டும். நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கும் ஒரு இறுதி நியாயத்தீர்ப்பு இருக்கும், ஆனால் அதன் காலத்தை நாம் தேவனிடம் விட்டுவிட வேண்டும்.
வீட்டெஜமானாகிய மனுஷனைப் பற்றிய உவமை (மத்தேயு 13:51-52)
இயேசு இந்த உவமைகளின் வரிசையை, சீஷர்கள் கனி கொடுக்கும் நிலமாக இருக்க வேண்டும் என்று போதிப்பதன் மூலம் தொடங்கினார். மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவர்களின் பொறுப்பைப் போதிப்பதன் மூலம் அவர் இந்த வரிசையை முடித்தார். பரலோக ராஜ்யத்துக்காகப் பயிற்றுவிக்கப்பட்ட வேதபாரகன் ஒவ்வொருவனும், தனது அறிவாகிய பொக்கிஷத்திலிருந்து மற்றவர்களுக்குக் கற்பிக்க எதையாவது கொண்டுவர வேண்டும். நாம் நமது நன்மைக்காக மட்டும் கற்றுக்கொள்வதில்லை. சீஷர்கள் மற்ற சீஷர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டனர்.
இந்த உவமை லூக்காவிலிருந்து வருகிறது, ஆனால் மத்தேயு, ஒலிவமலைப் பிரசங்கத்தின் போது இயேசு கூறிய இதே போன்ற ஒரு உவமையை உள்ளடக்கியுள்ளார். இயேசு எருசலேமுக்குச் சமீபமாயிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் உடனே தோன்றும் என்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் இந்தப் பத்து ராத்தல் உவமையைச் சொன்னார் (லூக்கா 19:11).
இயேசு எருசலேமை நெருங்க நெருங்க, மக்கள் ஒரு அரசியல் மேசியாவை எதிர்பார்த்து மிகுந்த உற்சாகமடைந்தனர். ராஜ்யத்திற்காகக் காத்திருக்கும்போது சீஷர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று போதிக்க இயேசு இந்த உவமையைச் சொன்னார். எஜமான் தங்களுக்குக் கொடுத்ததை அவர்கள் கவனமாக மறைத்து வைக்கக்கூடாது; மாறாக, ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
[1]தானியேல் 4:12 மற்றும் எசேக்கியேல் 31:6-ல், மரத்தில் வந்து தங்கும் பறவைகள் பல தேசங்களைச் சென்றடையும் ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறிக்கின்றன.
[2]ஒரு “ராத்தல்” என்பது ஒரு பண அலகாகும். இது ஒரு தொழிலாளியின் சுமார் மூன்று மாத ஊதியத்திற்குச் சமமானது.
ராஜ்யத்தின் முழுமையான ஸ்தாபிதம்
► மத்தேயு 24-25-ஐ வாசிக்கவும்.
இயேசுவின் ஆரம்பகாலப் போதனைகளில் பெரும்பகுதி ராஜ்யத்தின் உடனடித் தொடக்கத்தை மையமாகக் கொண்டிருந்தது. அவர் தனது பூமிக்குரிய ஊழியத்தின் முடிவை நெருங்கியபோது, எதிர்காலத்தில் ராஜ்யம் முழுமையாக ஸ்தாபிக்கப்படுவதைக் குறித்து இயேசு அதிகம் பேசினார். மத்தேயு 24 மற்றும் 25-ல் உள்ள ஒலிவமலைப் பிரசங்கம், ராஜ்யத்தின் வாக்குத்தத்தங்களின் எதிர்கால நிறைவேறுதலைப் பற்றிய இயேசுவின் மிக விரிவான போதனையாகும்.
ஒரு நெருக்கமான பார்வை: ஏரோதுவின் தேவாலயம்
கி.மு. 19-ல், மகா ஏரோது தேவாலயத்தைப் புதுப்பிக்கும் ஒரு பெரிய பணியைத் தொடங்கினான்.[1] கி.மு. 516-ல் செருபாபேலால் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயம், சாலொமோனின் முதல் ஆலயத்தை விடச் சிறியதாகவும் எளிமையாகவும் இருந்தது. ஏரோது தேவாலயத்தை அதன் முந்தைய அழகிற்கு மீட்டெடுக்க விரும்பினான். 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு கட்டுமானத் திட்டத்தை அவன் தொடங்கினான். ஏரோது கட்டுமானத்திற்காக 10,000 திறமையான தொழிலாளர்களை நியமித்தான், மேலும் ஆசாரியர்கள் மட்டுமே நுழையக்கூடிய தேவாலயத்தின் பகுதிகளில் வேலை செய்ய 1,000 லேவியர்களுக்குப் பயிற்சி அளித்தான்.
உலகின் மிகப் பெரிய தேவாலயத்தைக் கட்டியவராகத் தான் நினைவுகூரப்பட வேண்டும் என்று ஏரோது நம்பினான். இயேசுவின் ஊழியக் காலத்திற்குள், வேலை 46 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தது (யோவான் 2:20). கி.பி. 63 வரை முழு ஆலயமும் கட்டி முடிக்கப்படவில்லை, ஆனால் கி.பி. 70-ல் ரோமத் தளபதி தீத்து எருசலேமை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, ஏழே ஆண்டுகளில் அது அழிக்கப்பட்டது.
ஏரோதுவின் தேவாலயம் சாலொமோனின் தேவாலயத்தை விட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது, பண்டிகைகளுக்காக எருசலேமுக்கு வந்த ஆயிரக்கணக்கான யூத யாத்ரீகர்களுக்குப் போதுமான இடவசதி இருந்தது. இது ரோமப் பேரரசின் அதிசயங்களில் ஒன்றாக இருந்தது.
[1]"Temple Comparison" என்பது Ricardo Gandelman அவர்களால் (CC BY 2.0) புகைப்படம் மற்றும் EB Vol. IV and Gal m ஆகியவற்றின் தேவாலயத் திட்டவரைபடங்களைக் கொண்டு SGC-யால் உருவாக்கப்பட்டது. இது https://www.flickr.com/photos/sgc-library/52345523784 என்ற இணையதளத்தில் பொதுக் களத்தில் (CC0) கிடைக்கிறது.
ராஜ்யத்தின் முழுமையான ஸ்தாபிதம் (தொடரும்)
எருசலேமில் இயேசுவின் கடைசி வாரத்தில், சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க வந்தார்கள். தேவாலயத்தின் கட்டுமானம் இன்னும் நடந்துகொண்டிருந்ததால், அவர்கள் தேவாலயத்திற்கு முன்பு வந்ததிலிருந்து மாற்றப்பட்ட ஒரு அம்சத்தைச் சுட்டிக்காட்டியிருக்கலாம்.
தேவாலயத்தின் அழிவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்துடன் இயேசு பதிலளித்தார். “இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார். அப்பொழுது சீஷர்கள், “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்” (மத்தேயு 24:2, 3) என்று கேட்டார்கள்.
சீஷர்களின் கேள்வி இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது; இயேசுவின் பதிலிலும் இரண்டு பகுதிகள் இருந்தன. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் உடனடி மற்றும் எதிர்கால அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கியது போலவே, இயேசுவின் தீர்க்கதரிசனமும் விரைவில் நடக்கவிருக்கும் சில நிகழ்வுகளையும், உலகத்தின் முடிவில் வரவிருக்கும் சில நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருந்தது.
சீஷர்கள், “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?” என்று கேட்டார்கள். “இவைகள்” (ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு தேவாலயம் இடிக்கப்படுவது) கி.பி. 70-ல் நடந்தது.
சீஷர்கள், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை” (மத்தேயு 24:30) பற்றிய எதிர்கால வருகையைக் குறித்து இயேசு பேசினார்.
யூதர்கள் மற்றும் புறஜாதிகள் என எல்லா தேசத்தாரையும் ராஜ்யம் உள்ளடக்கும் என்று இயேசு காட்டினார். ராஜ்யத்தில் புறஜாதிகளைச் சேர்ப்பது “உலகம் உண்டானது முதல்” (மத்தேயு 25:34) தேவனுடைய திட்டமாக இருந்தது என்று அவர் காட்டினார். தேவனுடைய ராஜ்யம் அவருடைய மக்களுக்கான நித்தியத் திட்டமாக இருந்தது.
ஒலிவமலைப் பிரசங்கத்தில் உள்ள இரண்டு உவமைகள், நாம் ராஜ்யத்திற்காகக் காத்திருக்கும்போது உண்மையாக இருக்க வேண்டும் என்று போதிக்கின்றன. ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் காத்திருந்தார்கள், ஆனால் சரியான ஆயத்தம் இல்லாமல் இருந்தார்கள். ஒரு தாலந்து வாங்கிய ஊழியக்காரன் காத்திருந்தான், ஆனால் அதை உண்மையோடு நிர்வகிக்கவில்லை. ராஜ்யத்தின் குடிமக்களாக, நாம் ராஜாவுக்குச் செய்யும் சேவையில் உண்மையுள்ளவர்களாகவும் விடாமுயற்சியுள்ளவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இறுதி நியாயத்தீர்ப்பில், மத்தேயு 13-ல் வாக்களிக்கப்பட்ட நல்லது மற்றும் கெட்டதுக்கு இடையிலான பிரிவினை நிகழும். இந்த நியாயத்தீர்ப்பு எப்போது, எப்படி நடக்கும் என்பது பற்றியது அல்ல முதன்மைப் பாடம். மாறாக, இறுதி நியாயத்தீர்ப்பிற்குத் தயாராகும் வகையில் ராஜ்யத்தின் குடிமக்கள் இன்று எப்படி வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையாகும். அந்த நாளில், ராஜா, “மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத்தேயு 25:40) என்று சொல்வார். ராஜாவின் வருகைக்காக நாம் எப்போதும் ஆயத்த நிலையில் வாழ வேண்டும். அவர் திரும்பும்போது நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும்.
பயன்பாடு: சீஷத்துவத்தின் விலை
► லூக்கா 9:21-27-ஐ வாசிக்கவும்.
தேவனுடைய ராஜ்யத்தின் குடியுரிமை கிருபையினால் மட்டுமே கிடைக்கிறது. நற்கிரியைகளைச் செய்வதன் மூலம் நாம் ராஜ்யத்தின் குடிமக்களாக ஆவதில்லை. இருப்பினும், சீஷத்துவ வாழ்க்கைக்கு எந்த விலைக்கிரயமும் இல்லை என்று இதற்கு அர்த்தமல்ல. லூக்கா 9-ல், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குச் சீஷத்துவத்தின் விலைக்கிரயத்தைப் பற்றிக் கற்பித்தார்.
டாலஸ் வில்லார்ட், “கிருபை முயற்சிக்கு எதிரானது அல்ல; கிருபை சம்பாதிப்பதற்குத் தான் எதிரானது” என்று எழுதினார்.[1] சீஷர்களாக நாம் எடுக்கும் முயற்சி கிருபைக்க்கு எதிரானது அல்ல. உண்மையில், சீஷத்துவத்தைப் பின்தொடரும் வல்லமை நமக்குக் கிடைப்பதே தேவனுடைய கிருபையினால் தான்.
இயேசுவின் போதனையில் உள்ள இந்த மாதிரியைக் கவனியுங்கள்: சிலுவை, அதன் பிறகு மகிமை.
இயேசு தனது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்தார் (லூக்கா 9:21-22). ராஜ்யத்தில் நமக்குக் குடியுரிமையை வழங்குவதற்காக இயேசு செலுத்திய விலை இதுவே.
தம்முடைய சீஷர்களாக இருப்பதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும் என்பதை இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம் கூறினார் (லூக்கா 9:23-25). “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக இயேசு சிலுவையில் பாடுபட்டார்; நாம் ராஜ்யத்தில் வாழ விரும்பினால் சிலுவையைச் சுமக்க வேண்டும்.
இயேசு தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசினார் (லூக்கா 9:26-27). “என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.”
சிலுவையில் பங்குபெறாமல் நாம் ராஜ்யத்தின் மகிமையில் பங்குபெற முடியாது. இயேசு, “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (பிலிப்பியர் 2:8-9).
தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும் அதே மாதிரியைப் பின்பற்றுகிறோம். “கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1 பேதுரு 5:10). ராஜ்யத்தில் வாழ்க்கையின் வடிவம் இதுதான். மகிமைக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பாகக் கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டார். அவருடைய சீஷர்கள் அவருடைய நித்திய மகிமையை அனுபவிப்பதற்கு முன்பாகச் சிலுவையைச் சுமக்க வேண்டும்.
இயேசு அர்ப்பணிப்புள்ள சீஷர்களைத் தேடினார். தம் சீஷர்களுக்குத் தலைசிறந்த அறிவு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை; அவர்களுக்கு உண்மையுள்ள இதயம் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஒரு சீஷனாக இருப்பதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும்? “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24).
1. சீஷன் தன்னைத்தான் வெறுக்கவேண்டும். சுயத்திற்கு “இல்லை” என்று சொல்வது கடினமான விஷயம்.
2. சீஷன்தன் சிலுவையைச் சுமக்கவேண்டும். சிலுவை என்பது மரணத்தைக் குறிக்கிறது என்பதை இயேசுவைப் பின்பற்றியவர்கள் புரிந்திருந்தார்கள். சிலுவை துன்பத்தையும் அவமானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால் சீஷத்துவத்திற்குச் சிலுவை தேவை என்பதை ஆதி கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள். இக்னேஷியஸ் இரத்தசாட்சியாக மரிப்பதற்கு ரோமுக்குப் பயணம் செய்தபோது, “நான் இப்போதுதான் ஒரு சீஷனாக இருக்கத் தொடங்குகிறேன்” என்று கூறினார். சீஷத்துவத்திற்குச் சிலுவை தேவை.
3. சீஷன்பண்பிலும் நடத்தையிலும் தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றவேண்டும். 'பின்பற்று' என்ற வினைச்சொல் நிகழ்காலத்தில் உள்ளது.
சீஷத்துவமானது அதன் விலைக்கிரயத்திற்குத் தகுதியானதா? ஒரு சீஷனாக இருப்பதற்கு இயேசு மூன்று காரணங்களைக் கூறினார். முரண் என்னவென்றால், பலரும் சீஷத்துவத்தைத் தவிர்ப்பதற்குக் கூறும் அதே காரணங்கள் இவைதான். நாம் ஏன் சீஷத்துவத்தின் விலையைச் செலுத்த வேண்டும்?
பாதுகாப்பு. சிலுவையைத் தவிர்ப்பதன் மூலம் தன் ஜீவனை இரட்சிக்க முயலுகிறவன் அதை இழந்துபோவான் (லூக்கா 9:24).
மெய்யான செல்வம். கிறிஸ்துவோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள மறுப்பவன் எல்லாவற்றையும் இழப்பான் (லூக்கா 9:25).
வெகுமதி. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே ராஜ்யத்தில் வரவேற்கப்படுவார்கள் (லூக்கா 9:26-27).
► லூக்கா 14:25-33-ஐ வாசிக்கவும்.
இயேசு பின்னர் சீஷத்துவத்தைப் பற்றிய தனது போதனையை விரிவுபடுத்தினார். அவரது அறிவுரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1. சீஷத்துவத்தின் விலை (லூக்கா 14:26-27)
2. விலையைக் கணக்கிடாமல் சீஷனாவதில் உள்ள மதியீனம் (லூக்கா 14:28-32)
3. சீஷத்துவத்தின் விலையைப் பற்றிய நினைவூட்டல் (லூக்கா 14:33)
நீங்கள் ஒரு கார் வாங்கச் சென்றால், விற்பனையாளர் சில நேரங்களில் இறுதி விலையை மறைக்க முயற்சிப்பார். அவர், “இந்த அழகான காரைப் பாருங்கள்!”, “இந்தக் காரின் சக்தியை உணருங்கள்!” என்று கூறுவார். நீங்கள் அந்தக் காரின் மேல் காதல் கொண்ட பிறகே அவர் விலையைச் சொல்வார்.
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ராஜ்யத்திற்குச் செல்லும் எளிதான பாதையை ஒருபோதும் வழங்கவில்லை. அவர் விலைப்பட்டியலுடனே தொடங்கினார்:
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்கா 14:26-27).
இப்பகுதியில், ஒன்றை வெறுப்பது என்பது அதை வேறொன்றை விடக் குறைவாக நேசிப்பதாகும். இயேசு, “உங்கள் சொந்தத் தகப்பன், தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், ஏன் உங்கள் சொந்த ஜீவனையும் விட என்னை அதிகமாக நேசிக்காவிட்டால் நீங்கள் என் சீஷராக இருக்க முடியாது!” என்று கூறுகிறார்.
ஒரு சீஷனாக இருக்க எவ்வளவு விலை கொடுக்க வேண்டும்? எல்லாம்! கிறிஸ்துவின் சீஷனாக இருப்பது என்பது மேசியாவின் வாக்குத்தத்தங்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதை விட அதிகம்; அதற்குச் சிலுவையில் பங்குபெறுவது அவசியம்.
► யோவான் சுவிசேஷம் சீஷத்துவத்திற்கான மூன்று கூடுதல் நிபந்தனைகளைத் தருகிறது. யோவான் 8:31, யோவான் 13:35, மற்றும் யோவான் 15:8 ஆகியவற்றை வாசியுங்கள். லூக்கா மற்றும் யோவான் சுவிசேஷங்களில் உள்ள சீஷத்துவத்திற்கான நிபந்தனைகளின் அடிப்படையில், உங்கள் ஊழியத்தில் நீங்கள் சீஷர்களை உருவாக்குகிறீர்களா?
[1]Dallas Willard, The Great Omission: Reclaiming Jesus’s Essential Teachings on Discipleship. (New York: HarperOne, 2006)
முடிவுரை: தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன?
கிறிஸ்து திரும்ப வரும் வரை, ராஜ்யத்தைப் பற்றிய அவரது போதனையின் எல்லா விவரங்களையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். இருப்பினும், சுவிசேஷங்கள் தேவனுடைய ராஜ்யத்தின் பல பண்புகளைக் காட்டுகின்றன:
தேவனுடைய ராஜ்யம், கடைசிக் காலத்தில் ஒரு சரீரப்பிரகாரமான, அரசியல் ரீதியான ஆட்சியையும் உள்ளடக்கும்.
தேவனுடைய ராஜ்யம் உலகளாவியது; அது யூத தேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
தேவனுடைய ராஜ்யம் என்பது உலகில் கிரியை செய்யும் தேவனுடைய வல்லமையாகும். ராஜ்யம் என்பது ஒரு பௌதிக ஆளுகை அல்ல. 10 ராத்தல் உவமையில், ராஜ்யம் என்பது ஆளுவதற்கான அதிகாரமே தவிர, ஒரு புவியியல் இடம் அல்ல (லூக்கா 19:11-12).
தேவனுடைய ராஜ்யம் இயற்கைக்கு அப்பாற்பட்டது (அதிசயமானது). மனிதன் விதையை விதைக்கிறான்; அவனால் அதை வளரச் செய்ய முடியாது. தேவனுடைய வல்லமையின் மூலம் ராஜ்யம் வளர்கிறது.
தேவனுடைய ராஜ்யம் என்பது ஒரு தெளிவற்ற எதிர்கால நம்பிக்கை மட்டுமல்ல; அது உடனடிப் பதிலை (செயல்பாட்டை) கோருகிற ஒரு தற்போதைய எதார்த்தமாகும்.
தேவனுடைய ராஜ்யம் இயேசுவின் ஊழியத்தின் மூலம் தொடங்கப்பட்டது. பிசாசுகளின் மீதான அவருடைய வல்லமை, சாத்தானின் ராஜ்யத்தின் மீது தேவனுடைய ராஜ்யம் கொண்ட வெற்றியை நிரூபித்தது.
தேவனுடைய ராஜ்யம் சபையின் கிரியைகள் மூலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. தற்போதைய காலத்தில் விசுவாசிகள் எப்படி வாழ அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மலைப்பிரசங்கம் காட்டுகிறது.
மகிமையில் ஆட்சி செய்ய கிறிஸ்து கடைசியாகத் திரும்பும்போது தேவனுடைய ராஜ்யம் முழுமையாக ஸ்தாபிக்கப்படும். சாத்தானின் வல்லமை முறியடிக்கப்படும், தேவன் நித்தியமாக ஆட்சி செய்வார்.
► இந்தப் பாடத்திட்டத்தின் பின்பகுதியில் “ராஜ்யத்தின் சுவிசேஷம்” என்ற தலைப்பிலான ஒரு பிரசங்கம் உள்ளது. பாடம் 7-ஐத் தொடர்வதற்கு முன் இதை வாசிக்கவும்.
பாடம் 6 வீட்டுப்பாடம்
இயேசுவின் மலைப்பிரசங்கத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரசங்கங்களின் வரிசையைத் தயார் செய்யுங்கள். உங்கள் பிரசங்கங்களின் கருப்பொருள் “தேவனுடைய ராஜ்யத்தில் வாழ்க்கை” என்பதாக இருக்க வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக நாம் இன்று எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுங்கள். நீங்கள் அந்தப் பிரசங்கத்தை நற்செய்தியாகப் பிரசங்கிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாக வாழ தேவனுடைய கிருபை எப்படி நமக்கு வல்லமையளிக்கிறது என்பதைக் காட்டுங்கள்.
Free to print for ministry use. No changes to content, no profit sales.
SGC exists to equip rising Christian leaders around the world by providing free, high-quality theological resources. We gladly grant permission for you to print and distribute our courses under these simple guidelines:
No Changes – Course content must not be altered in any way.
No Profit Sales – Printed copies may not be sold for profit.
Free Use for Ministry – Churches, schools, and other training ministries may freely print and distribute copies—even if they charge tuition.
No Unauthorized Translations – Please contact us before translating any course into another language.
All materials remain the copyrighted property of Shepherds Global Classroom.